முள்ளிவாய்க்கால் பேரவலம் ஒரு இனத்தின் அழிவு என்று ஒரு வார்த்தையில் கூறிவிட முடியாது-அரசியல் சாணக்கியன்

முள்ளிவாய்க்கால் எமது இனத்தின் முடிவல்ல. முள்ளிவாய்க்கால் பேரவலம் ஒரு இனத்தின் அழிவு என்று ஒரு வார்த்தையில் கூறிவிட முடியாது. அந்த அவலத்தை சந்திக்காத யாருக்கும் அதன் வலிகளையும் முற்று முழுதாக புரிந்து கொள்ள முடியாது.

நீங்கள் கேள்விப்பட்ட பார்த்த ஒளிப்பதிவில் புகைப்படங்கள் மட்டும்தான் உங்களுக்கு வலியை ஏற்படுத்துகின்றன. உங்களின் உறவுகளின் அவலக் குரல்கள் உங்கள் இதயங்களை தட்டி எழுப்பி இருக்கலாம் வலியின் வேதனையை.

ஒரு மானிடப் பிறவி வரலாற்றில் சந்திக்க முடியாத ஒரு பேரவலம் முள்ளிவாய்க்கால். இயற்கையின் அழிவுகள் கூட ஒரு சில நாட்கள் தான்.

எந்த துயரத்தைப் பகிர்ந்து கொள்வது, பசியில் ஆரம்பித்து மரணம் வரை பகிர்ந்து கொள்வதா, கருவறையிலிருந்து காலம் முதிர்ந்து சென்று மரணிக்கும் மனிதர் வரை, அனுபவித்த கொடுமையான நாட்களின் அவலத்தை சொல்வதா.

ஏன் சாகிறோம் எதற்கு சாகிறோம் என்று அறிந்திட முடியாத வயதில் இருந்து, மரணத்துக்கும் வயதில்லை என்று அந்தக் பேரவலம், மனிதனாக பிறந்த ஒவ்வொரு உயிருக்கும். உணர்த்தியது.

ஐயோ தாங்க முடியவில்லை, யாரைக் காப்பாற்றுவது, என்று தெரியாமல் ஒவ்வொரு உயிர்களும் பரிதவித்த பொழுது, இந்த பாதகத்தை புரிந்தவர்களை வெறும் வார்த்தைகளால் பாவிகள் என்று கூறிட முடியாது. மானிடப் பிறவியில் பிறக்க முடியாத மனிதர்கள் என்று தான் கூற வேண்டும்.

வலிகளை புரிந்து கொள்வதற்கு அங்கு இருந்தவர்களுக்கு நேரம் இருக்கவில்லை. நொடிப் பொழுது வலிகள் கடந்த நாட்களாகவே சென்றன. உலகப் பரப்பில் வலிகளுக்கு சொந்தமான இனமாக அன்று தமிழினம் தவித்தது.

அழுவதற்கு கண்ணீரும் இல்லை கண்களில். கண்ணீரும் ரத்தமாக ஓடிய வரலாறு அங்குதான் நடைபெற்றது. ஊசி குத்தினால் ஏற்படும் வலியை உணர்ந்த நாங்கள், கைகள் கால்கள் துண்டு, துண்டாகி உடல்கள் கூறு கூறாக அறுந்து தொங்கும் பொழுதும், அதை உணர முடியவில்லை. ஓரிடத்தில் காயம் என்றால் உணர்ந்து கொள்ள முடியும், உடல் முழுவதுமே, காயங்கள் என்றால் எப்படி உணர்ந்து கொள்ள முடியும்.

முதுகுப் பக்கத்தில் ஊடாக வயிற்றில் இருக்கும் குழந்தையையும் பார்க்கலாம், இதயத்தையும் பார்க்கலாம், என்ற வரலாற்றை பதிந்தது முள்ளிவாய்க்கால். யாரைக் காப்பாற்றுவது என்று வழி தெரியாமல் ஒருவரை ஒருவர் காப்பாற்றுவதற்கு விட்டுக் கொடுத்தார்கள் என்று, ஒரு வார்த்தையில் கூறிட முடியாது.

பாலகர்களும், பசியை மறக்கத் சொல்லிக் கொடுத்த பெற்றோர்களும், பிள்ளைகளுக்காக, பசியைத் துறந்து, பசியால் அழும் பிள்ளைக்கு முன் துடி, துடித்து, உயிரைத் துறந்து, பிள்ளைகள் பசியால் அழுகிறார்கள் அல்லது, தமது தாய், தந்தை, துடி, துடித்து இறந்ததை பார்த்துத் அழுகிறார்கள் என்று தெரிந்து கொள்ள முடியாது வரலாறும் அங்கு தான் நடைபெற்றது.

ஒரு பிள்ளையின் உடலைப் பார்த்து அழுதுகொண்டு, தானும் உடம்பில் காயங்களை சுமந்து, காயத்துக்கு மருந்து கட்டாமல் தனது மற்றைய பிள்ளைக்கு பால் கொடுத்த தாயும், இறந்த தாயின் உடலில் பால் குடித்த பிள்ளையும் கொண்ட இனமாகத் தான் இருந்தோம் அன்று முள்ளி வாய்க்காலில்.

மனிதனுக்கு இரண்டு கைகள் காணாது என்று அன்று காயப்பட்ட அனைவருக்கும் தெரியும். எந்தக் கையை கொண்டு எந்த காயத்திலிருந்து வெளியேறும் ரத்தத்தை தடுப்பது என்று தெரியாமல், எனது உடலில் இரத்தம் வெளியேறினாலும் பிள்ளைக்காக தாயும், மனைவிக்காக கணவனும், தங்கைக்காக அண்ணாவும், இப்படி அனைத்து உறவுகளும் உடலில் இருந்து இரத்தம் வெளியேறக் கூடாது என்று, தங்கள் கைகளை பிறருக்காக அர்ப்பணித்து, தங்களை அர்ப்பணித்தவர்கள், அதுதான் முள்ளிவாய்க்கால்.


இன்னும், எத்தனை துன்பங்கள் துயரங்கள் சொல்லிட வார்த்தைகள் இல்லை. உரிமைக்காக போராடிய எம்மை கொன்றழித்த அவர்களே. ஒரு நாட்டுக்குள் வாழும் சகோதர இனத்தை கொன்றொழித்து, பால், சோறு கொடுத்து கொண்டாடி மகிழ்ந்த அவர்களே. உங்களிடம் எமக்கான நீதியை எதிர்பார்க்க முடியாது.

காலங்கள் கடந்தும் அதை நினைவு கூறும் நீங்கள், அந்த வலிகளிலிருந்து இருந்து எமது இனத்தை மீட்டெடுக்க என்ன செய்தீர்கள் இன்று வரை. யாரிடம் நீதியை எதிர்பார்ப்பது. யாரை குறை கூறுவது. யாரை நம்புவது. யாரிடம் நீதியைப் பெற்றுக் கொள்வது. யாரிடம் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது என்பது தெரியாமல், இன்று வரை உறவுகளைப் பறிகொடுத்த ஆன்மாக்களின் உறவுகளாக இன்றும் இருக்கிறோம்.

அனைத்தும் அழிக்கப்பட்டு, அடிப்படையற்ற வாழ்வும் இல்லாமல், இன்றும் அடிப்படை வாழ்வுக்காக எங்கும் ஒரு இனமாக தான் இருக்கிறோம் நாம். முள்ளிவாய்க்கால் ஆயுதத்தால் கொன்றொழிக்கப்பட்ட நாளிலிருந்து வரலாற்று முடிவிலிருந்து. மீண்டும், அரசியல் வரலாற்றின் ஊடாக இன்று மற்றொரு முள்ளிவாய்க்காலை சந்தித்துக் கொண்டிருக்கின்றோம். இதற்குக் காரணம் எமது தமிழ் அரசியல் தலைமைகள் தான்.


எம்மைக் கொன்றொழித்த அவர்களிடம், நமக்கான நீதியை எதிர்பார்க்க முடியாது. அது இன்றைய அரசியல் தலைமைகளும், மக்களும் சர்வதேசமும் அறிந்த ஒன்று. ஆனால், உங்களிடம் நமக்கான வாழ்வாதார கட்டமைப்புகளை கட்டியெழுப்ப கூடிய சந்தர்ப்பங்கள் இருந்தும், எம்மை மேம்படுத்த முயற்சி செய்யவில்லை இத்தனை ஆண்டுகளாக. தமிழ் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த முயற்சி செய்யாத எந்த அரசியல் தலைமைகளும் முள்ளி வாய்க்கால் நினைவு தினம் கொண்டாடுவதற்கு தகுதியற்றவர்கள்.

எனது அன்பான தமிழ் உறவுகளே..

முள்ளிவாய்க்காலில் இறுதிவரை வலியை சுமந்த ஒருவனாகக் கூறுகிறேன். முள்ளிவாய்க்காலில் பறிகொடுத்த உறவுகளின் நினைவு நாள் ஆண்டு தோறும் வந்து செல்லும். வெறுமனே நினைவு நாளை கொண்டாடுவது உடன் நின்று விடாதீர்கள். அன்று முள்ளிவாய்க்காலில் குண்டு மழைகளுக்கு மத்தியில் உணவுக்கு கையேந்திய இனம் நாம்.

இன்று ஆண்டுகள் பத்தாண்டு ஓடியும், அதே நினைவு நாளில் முள்ளிவாய்க்கால் உணவு வழங்கல் என்று வழங்குகிறார்கள் எமது இனத்திற்கு. இதுதான் எமது அரசியல் தலைமைகள் எம்மை முள்ளி வாய்க்காலில் இருந்து மீட்டெடுத்த வரலாறு இன்று.

சிந்தியுங்கள், முயற்சியுங்கள், நாம் இனமாக மீண்டு வருவதற்கு. யுத்தம் ஆரம்பித்ததில் இருந்து, முள்ளிவாய்க்கால் வரை சென்று மரணித்த அனைத்து உறவுகளையும் நினைவு கொள்ளும், அதே நேரத்தில். இன்று வாழ்ந்து கொண்டிருக்கும் உங்கள் உறவுகளின் துன்ப துயரங்களில் பங்கு கொள்ளும் என்றும், முள்ளிவாய்க்காலில் வலிகளை சுமந்த ஒருவனாக, எமது இனத்தின் வலிகளை பகிர்ந்து கொள்ளுங்கள், மற்றவர்களும் புரிந்து கொள்ளட்டும்...


வலிகளுடன், 
அரசியல் சாணக்கியன்.
Share:

No comments:

Post a Comment

Popular Posts

Recent Posts

Contact Form

Name

Email *

Message *

Contact Form

Name

Email *

Message *