முள்ளிவாய்க்கால் பேரவலம் ஒரு இனத்தின் அழிவு என்று ஒரு வார்த்தையில் கூறிவிட முடியாது-அரசியல் சாணக்கியன்

முள்ளிவாய்க்கால் எமது இனத்தின் முடிவல்ல. முள்ளிவாய்க்கால் பேரவலம் ஒரு இனத்தின் அழிவு என்று ஒரு வார்த்தையில் கூறிவிட முடியாது. அந்த அவலத்தை சந்திக்காத யாருக்கும் அதன் வலிகளையும் முற்று முழுதாக புரிந்து கொள்ள முடியாது.

நீங்கள் கேள்விப்பட்ட பார்த்த ஒளிப்பதிவில் புகைப்படங்கள் மட்டும்தான் உங்களுக்கு வலியை ஏற்படுத்துகின்றன. உங்களின் உறவுகளின் அவலக் குரல்கள் உங்கள் இதயங்களை தட்டி எழுப்பி இருக்கலாம் வலியின் வேதனையை.

ஒரு மானிடப் பிறவி வரலாற்றில் சந்திக்க முடியாத ஒரு பேரவலம் முள்ளிவாய்க்கால். இயற்கையின் அழிவுகள் கூட ஒரு சில நாட்கள் தான்.

எந்த துயரத்தைப் பகிர்ந்து கொள்வது, பசியில் ஆரம்பித்து மரணம் வரை பகிர்ந்து கொள்வதா, கருவறையிலிருந்து காலம் முதிர்ந்து சென்று மரணிக்கும் மனிதர் வரை, அனுபவித்த கொடுமையான நாட்களின் அவலத்தை சொல்வதா.

ஏன் சாகிறோம் எதற்கு சாகிறோம் என்று அறிந்திட முடியாத வயதில் இருந்து, மரணத்துக்கும் வயதில்லை என்று அந்தக் பேரவலம், மனிதனாக பிறந்த ஒவ்வொரு உயிருக்கும். உணர்த்தியது.

ஐயோ தாங்க முடியவில்லை, யாரைக் காப்பாற்றுவது, என்று தெரியாமல் ஒவ்வொரு உயிர்களும் பரிதவித்த பொழுது, இந்த பாதகத்தை புரிந்தவர்களை வெறும் வார்த்தைகளால் பாவிகள் என்று கூறிட முடியாது. மானிடப் பிறவியில் பிறக்க முடியாத மனிதர்கள் என்று தான் கூற வேண்டும்.

வலிகளை புரிந்து கொள்வதற்கு அங்கு இருந்தவர்களுக்கு நேரம் இருக்கவில்லை. நொடிப் பொழுது வலிகள் கடந்த நாட்களாகவே சென்றன. உலகப் பரப்பில் வலிகளுக்கு சொந்தமான இனமாக அன்று தமிழினம் தவித்தது.

அழுவதற்கு கண்ணீரும் இல்லை கண்களில். கண்ணீரும் ரத்தமாக ஓடிய வரலாறு அங்குதான் நடைபெற்றது. ஊசி குத்தினால் ஏற்படும் வலியை உணர்ந்த நாங்கள், கைகள் கால்கள் துண்டு, துண்டாகி உடல்கள் கூறு கூறாக அறுந்து தொங்கும் பொழுதும், அதை உணர முடியவில்லை. ஓரிடத்தில் காயம் என்றால் உணர்ந்து கொள்ள முடியும், உடல் முழுவதுமே, காயங்கள் என்றால் எப்படி உணர்ந்து கொள்ள முடியும்.

முதுகுப் பக்கத்தில் ஊடாக வயிற்றில் இருக்கும் குழந்தையையும் பார்க்கலாம், இதயத்தையும் பார்க்கலாம், என்ற வரலாற்றை பதிந்தது முள்ளிவாய்க்கால். யாரைக் காப்பாற்றுவது என்று வழி தெரியாமல் ஒருவரை ஒருவர் காப்பாற்றுவதற்கு விட்டுக் கொடுத்தார்கள் என்று, ஒரு வார்த்தையில் கூறிட முடியாது.

பாலகர்களும், பசியை மறக்கத் சொல்லிக் கொடுத்த பெற்றோர்களும், பிள்ளைகளுக்காக, பசியைத் துறந்து, பசியால் அழும் பிள்ளைக்கு முன் துடி, துடித்து, உயிரைத் துறந்து, பிள்ளைகள் பசியால் அழுகிறார்கள் அல்லது, தமது தாய், தந்தை, துடி, துடித்து இறந்ததை பார்த்துத் அழுகிறார்கள் என்று தெரிந்து கொள்ள முடியாது வரலாறும் அங்கு தான் நடைபெற்றது.

ஒரு பிள்ளையின் உடலைப் பார்த்து அழுதுகொண்டு, தானும் உடம்பில் காயங்களை சுமந்து, காயத்துக்கு மருந்து கட்டாமல் தனது மற்றைய பிள்ளைக்கு பால் கொடுத்த தாயும், இறந்த தாயின் உடலில் பால் குடித்த பிள்ளையும் கொண்ட இனமாகத் தான் இருந்தோம் அன்று முள்ளி வாய்க்காலில்.

மனிதனுக்கு இரண்டு கைகள் காணாது என்று அன்று காயப்பட்ட அனைவருக்கும் தெரியும். எந்தக் கையை கொண்டு எந்த காயத்திலிருந்து வெளியேறும் ரத்தத்தை தடுப்பது என்று தெரியாமல், எனது உடலில் இரத்தம் வெளியேறினாலும் பிள்ளைக்காக தாயும், மனைவிக்காக கணவனும், தங்கைக்காக அண்ணாவும், இப்படி அனைத்து உறவுகளும் உடலில் இருந்து இரத்தம் வெளியேறக் கூடாது என்று, தங்கள் கைகளை பிறருக்காக அர்ப்பணித்து, தங்களை அர்ப்பணித்தவர்கள், அதுதான் முள்ளிவாய்க்கால்.


இன்னும், எத்தனை துன்பங்கள் துயரங்கள் சொல்லிட வார்த்தைகள் இல்லை. உரிமைக்காக போராடிய எம்மை கொன்றழித்த அவர்களே. ஒரு நாட்டுக்குள் வாழும் சகோதர இனத்தை கொன்றொழித்து, பால், சோறு கொடுத்து கொண்டாடி மகிழ்ந்த அவர்களே. உங்களிடம் எமக்கான நீதியை எதிர்பார்க்க முடியாது.

காலங்கள் கடந்தும் அதை நினைவு கூறும் நீங்கள், அந்த வலிகளிலிருந்து இருந்து எமது இனத்தை மீட்டெடுக்க என்ன செய்தீர்கள் இன்று வரை. யாரிடம் நீதியை எதிர்பார்ப்பது. யாரை குறை கூறுவது. யாரை நம்புவது. யாரிடம் நீதியைப் பெற்றுக் கொள்வது. யாரிடம் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது என்பது தெரியாமல், இன்று வரை உறவுகளைப் பறிகொடுத்த ஆன்மாக்களின் உறவுகளாக இன்றும் இருக்கிறோம்.

அனைத்தும் அழிக்கப்பட்டு, அடிப்படையற்ற வாழ்வும் இல்லாமல், இன்றும் அடிப்படை வாழ்வுக்காக எங்கும் ஒரு இனமாக தான் இருக்கிறோம் நாம். முள்ளிவாய்க்கால் ஆயுதத்தால் கொன்றொழிக்கப்பட்ட நாளிலிருந்து வரலாற்று முடிவிலிருந்து. மீண்டும், அரசியல் வரலாற்றின் ஊடாக இன்று மற்றொரு முள்ளிவாய்க்காலை சந்தித்துக் கொண்டிருக்கின்றோம். இதற்குக் காரணம் எமது தமிழ் அரசியல் தலைமைகள் தான்.


எம்மைக் கொன்றொழித்த அவர்களிடம், நமக்கான நீதியை எதிர்பார்க்க முடியாது. அது இன்றைய அரசியல் தலைமைகளும், மக்களும் சர்வதேசமும் அறிந்த ஒன்று. ஆனால், உங்களிடம் நமக்கான வாழ்வாதார கட்டமைப்புகளை கட்டியெழுப்ப கூடிய சந்தர்ப்பங்கள் இருந்தும், எம்மை மேம்படுத்த முயற்சி செய்யவில்லை இத்தனை ஆண்டுகளாக. தமிழ் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த முயற்சி செய்யாத எந்த அரசியல் தலைமைகளும் முள்ளி வாய்க்கால் நினைவு தினம் கொண்டாடுவதற்கு தகுதியற்றவர்கள்.

எனது அன்பான தமிழ் உறவுகளே..

முள்ளிவாய்க்காலில் இறுதிவரை வலியை சுமந்த ஒருவனாகக் கூறுகிறேன். முள்ளிவாய்க்காலில் பறிகொடுத்த உறவுகளின் நினைவு நாள் ஆண்டு தோறும் வந்து செல்லும். வெறுமனே நினைவு நாளை கொண்டாடுவது உடன் நின்று விடாதீர்கள். அன்று முள்ளிவாய்க்காலில் குண்டு மழைகளுக்கு மத்தியில் உணவுக்கு கையேந்திய இனம் நாம்.

இன்று ஆண்டுகள் பத்தாண்டு ஓடியும், அதே நினைவு நாளில் முள்ளிவாய்க்கால் உணவு வழங்கல் என்று வழங்குகிறார்கள் எமது இனத்திற்கு. இதுதான் எமது அரசியல் தலைமைகள் எம்மை முள்ளி வாய்க்காலில் இருந்து மீட்டெடுத்த வரலாறு இன்று.

சிந்தியுங்கள், முயற்சியுங்கள், நாம் இனமாக மீண்டு வருவதற்கு. யுத்தம் ஆரம்பித்ததில் இருந்து, முள்ளிவாய்க்கால் வரை சென்று மரணித்த அனைத்து உறவுகளையும் நினைவு கொள்ளும், அதே நேரத்தில். இன்று வாழ்ந்து கொண்டிருக்கும் உங்கள் உறவுகளின் துன்ப துயரங்களில் பங்கு கொள்ளும் என்றும், முள்ளிவாய்க்காலில் வலிகளை சுமந்த ஒருவனாக, எமது இனத்தின் வலிகளை பகிர்ந்து கொள்ளுங்கள், மற்றவர்களும் புரிந்து கொள்ளட்டும்...


வலிகளுடன், 
அரசியல் சாணக்கியன்.
Share:

அமரர் கந்தையா சண்முகம் அவர்கள் நினைவாக 50 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.


அனைத்து வயவை உறவுகளுக்கும் அன்பான வணக்கம்!!!

இன்று அமரர் கந்தையா சண்முகம் அவர்கள் இறைபதம் அடைந்து நான்காம் ஆண்டு நினைவு அஞ்சலியும், ஆண்டுத் துவசமும் ஆன இன்று 13/05/2020 அன்னாரின் ஞாபகார்த்தமாக அவருடைய குடும்பத்தினரால் வயாவிளான் திக்கம்பிரையிலும், வடமூலையின் ஒரு பகுதியிலும் மீளக்குடியேறி இருக்கும் வருமானம் குறைந்த 50 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.

இதனை சர்வதேச வயாவிளான் மக்கள் ஒன்றியம் ஊடாக நெறிப்படுத்தி வழங்கப்பட்டது. மக்களின் விபரங்களை எடுத்து சிறப்பாக இந்த வேலைத் திட்டத்தினை செய்து முடித்த எமது தாயகத் தொண்டர்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகள்.

இப்படியான பெற்றோரின் நினைவு நாட்கள், பிறந்த நாட்கள், திருமண நாட்கள் இவற்றின் போது ஊரிலிருக்கும் எமது மக்களுக்கு பயன் படக்கூடிய மாதிரியான விடயங்களை ஒவ்வொருவரும் செய்தால் மிகவும் சிறப்பாக இருக்குமென்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்,
ஊரால் மொழியால் ஒன்றுபடுவோம்! 

நன்றி - சர்வதேச வயாவிளான் மக்கள் ஒன்றியம்




Share:

புன்னாலைக் கட்டுவன் வடக்கு ஸ்ரீதுர்க்கா வளாகத்தில் "செழிப்புமிக்க வீட்டுத்தோட்டம்"

புன்னாலைக் கட்டுவன் வடக்கு ஸ்ரீதுர்க்கா வளாகத்தில் "செழிப்புமிக்க வீட்டுத்தோட்டம்" சமூக ஆர்வலர் இரத்தினசிங்கம் கெங்காதரனால் அங்குரார்ப்பனம் செய்யப்பட்டுள்ளது..!

உலகம் முழுவதும் கொரோனா நோய்க்கிருமித் தொற்று பரவிக்கொண்டிருக்கும் நிலையினைத் தொடர்ந்து - நாட்டில் உணவு உற்பத்தியை விரைவுபடுத்தும் திட்டத்தை அரசாங்கம் தொடங்கியுள்ளது.

"செழிப்புமிக்க வீட்டுத் தோட்டம்" எனப்படும் இத் திட்டத்திற்கு அமைவாக (2020.05.07)  அன்று புன்னாலைக் கட்டுவன் வடக்கு ஸ்ரீதுர்க்கா வளாகத்தில் "செழிப்புமிக்க வீட்டுத் தோட்டம்" திட்டம் சமூக ஆர்வலர் இரத்தினசிங்கம் கெங்காதரன் அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது!

இந் நிகழ்வில் பிரிவின் கிராம அலுவலர் திரு.ந.நவசாந்தன் கிராம அலுவலர் திரு.சு.சிவராமன் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர், உப தபால் நிலைய தபால் அதிபர், ஸ்ரீதுர்க்கா சனசமூக நிலைய தலைவர் திரு.இ.விஷ்ணுரஞ்சன், உப தலைவர் திரு.வசீகரன் சனசமூக நிலைய முக்கிய உறுப்பினர் திரு.பாலசிங்கம் உட்பட கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

இத் திட்டம் ஸ்ரீதுர்க்கா வளாகத்திலுள்ள அனைத்து அலுவலகங்களின் அலுவலர்களின் பங்களிப்புடனும் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் வெற்றியளிப்பதன் மூலம் கிராமத்தில் பல வீட்டுத் தோட்டங்களை உருவாக்க உதவி வழங்கவுள்ளதாகவும் சமூக ஆர்வலர் கெங்காதரன் அவர்கள் தெரிவித்தார்.

அத்தோடு வீட்டுத் தோட்டம் செய்வதற்குத் தேவையான ஆலோசனைகளையும், வீட்டுத் தோட்டத்திற்குத் தேவையான விதைகள், உரங்கள் மற்றும் தாவரங்களைப் பெற்றுக்கொள்ள உறுதுணை புரிவதாகவும் தெரிவித்துள்ளார்.

தகவல்- ஈவினை ஹரி.







Share:

தவறுக்கு மன்னிக்கவும். நான் திருடன் இல்லை.


வயாவிளான் (வசாவிளான்) மக்கள் அனைவருக்கும், மற்றும் இந்த இணைய நிர்வாகிகள் அனைவருக்கும், மற்றும், முக புத்தக உறவுகள் அனைவருக்கும், வணக்கம். முதலில் உங்கள் இணையத்திற்கு சொந்தமான இலச்சினையை நான் பயன்படுத்தியதற்கு, என் தவறை ஏற்று என் மனப் பூர்வமான மன்னிப்பைக் கேட்டுக் கொள்கிறேன்.

புதிதாக ஆரம்பிக்கப்படட vayavilanweb எனும் இணையத்திற்கு தற்காலிகமாக ஒரு இலச்சினை தேவைப்பட்டதன் காரணமாக, நானும் வசவிளானைச் சேர்ந்தவன் என்ற காரணத்தால், அதன் உரிமையில், அழகாக இருந்த அந்தச் சின்னத்தை, உங்கள் அனுமதியின்றிப் பயன்படுத்திவிடடேன், அதற்கு மன்னிக்கவும்.

அதே வேளை இந்த இணையத்தை பயன்படுத்தி நான் யாரிடமும் நிதி சேகரிக்கவோ அல்லது, வேறு எந்த வகையான உதவிகளையோ பெற்றுக்கொள்ள முயற்சிக்கவும் இல்லை. யாரையும் ஏமாற்றவும் இல்லை. ஏதோ என்னால் முடிந்த வரை, என் கிராம மக்களுக்கு ஏதாவது செய்யவேண்டும் எனும் நோக்கத்தில் மட்டுமே நான் இதை ஆரம்பித்துள்ளேன். இதை தவிர வேறு எந்த விதமான உள் நோக்கமும் எனக்கில்லை. அதுவும் உங்களுக்குள், எங்களுக்குள் ,ஒற்றுமையின்மையின் காரணமாகவே இந்த உருவாக்கமும்.

உங்கள் பதிவு, நல்ல பதிவு ஆனால், உங்களுக்குள் ஒற்றுமை என்பது இல்லையே, ஆளுக்கு ஒரு அமைப்பு அதிலும், நிர்வாக மாற்றமே இல்லாத ஒரு அமைப்பு, யார், யார் நிர்வாகிகள் என்றே தெரியாத அமைப்பு, இப்படி ஒரு அமைப்பை வைத்து ஊருக்கு உங்களால், எங்களால் எதை நேர்த்தியாகச் செய்ய முடியும் என்று நினைக்கிறீர்கள்,? சும்மா முக புத்தகத்தில் எதையும் எழுதிவிட்டு, அதை சாதித்துவிட்டதாக பெரு மூச்சு விட்டுக் கொண்டு இருக்க முடியாது.

தேவையற்ற குற்றச் சாட்டுக்களை நிறுத்திவிட்டு, அனைவரும் ஒன்றுபட்டுச் செயற்பட விரும்பினால், வருடம் இருமுறை, அல்லது இரண்டு வருடங்களுக்கு ஒருதடவை, அல்லது ஐந்து வருடங்களுக்கு ஒருதடவை, வெளிப்படையான, மாற்றங்களை செய்யக் கூடிய நிர்வாக குழு ஒன்றை உருவாக்கி, அதன் ஊடகப் பணிகளை முன்னெடுக்க நீங்கள் முன் வருவீர்களானால், மாற்றங்களை ஏற்படுத்தலாம் என்பது எனது கருத்து. இல்லையேல் அவசரகால உணவுப் பொதிகள் வழங்கும் சேவையை மட்டும் தான் செய்ய முடியும். ஏதும் கருத்துப் பிழை இருந்தால் மன்னிக்கவும்.

நன்றி

ஒன்றுபடல் உண்டு வாழ்வு, ஒற்றுமையே பலம்!

தி.மதன்.
மடத்தடி, வயவையூர்.
Share:

மின் மீன் மன்றத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும் அங்கம் 13


வணக்கம் அங்கம் நான் எழுதிய பன்னிரண்டாவது அங்கத்திலே எமது பாடசாலையையும், பாடசாலை சம்பந்தமான விளையாட்டு அணியையும், விளையாட்டு வீரர்களையும், பயிற்சியாளர்களையும், இன்னும் பல, பல தரப்பட்டவர்களையும் பற்றி எழுதியிருந்தேன்.

சம்பவம் நடைபெற்று நீண்ட காலமாக இருந்த படியாலும், யுத்தத்திலே நாங்கள் புலம் பெயர்ந்து உளரீதியாக பல பாதிப்புகளை அடைந்திருந்ததாலும், சில நினைவுகளைத் தவறாக பதிவிட்டுள்ளேன். அதற்காக நான் மிகவும் மனம் வருந்துகிறேன்.

அங்கம் 13 என்பது எண் சோதிடத்தில் பதின்மூன்றாம் இலக்கம் மானிடர்களுக்கு பொருத்தமற்ற ஒரு இலக்கமாக கண்டறியப்பட்டுள்ளது. பயணிகள் தங்கும் ஹோட்டல்களிலும், ஆஸ்பத்திரிகளில் இன்னும் ஏனைய இடங்களிலும் பதின்மூன்றாம் இலக்கத்தை தவிர்த்தே வருகின்றார்கள். ஆனால், என்னுடைய அங்கத்திலே பதின்மூன்றாம் இலக்கம் மிகவும் ஒரு உன்னதமான நிகழ்வினை விளக்குவதாக அமைந்துள்ளது.

பன்னிரண்டாம் இலக்கத்தில் எழுதப்பட்ட விடயங்களில் பல விளக்கங்களையும், பல வாதப் பிரதி வாதங்களையும், கடும் விமர்சனங்களையும், வரலாற்றின் தவறுகளையும், சரியான வரையறைகளையும், நிரூபிக்க உலகில் பரந்து வாழுகின்ற எங்களுடைய இனம் எடுத்துக் கொண்ட முயற்சிக்கு முதற்கண் எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வளவு உணர்ச்சியோடு எந்த ஒரு விவாதங்களையும் நான் எதிர் பார்க்கவில்லை, உணர்ச்சியில் விளையாடும் கவி சிங்கங்களாக அன்றைய காலத்தில் மத்திய மகா வித்தியாலய மாணவர்களும் சரி, விளக்கங்களை, விமர்சனங்களை, தங்களுடைய அறிவுக்கு ஏற்ற வகையிலே விளக்கி இருந்தார்கள்.

எனக்கு ஒரே ஒரு உண்மை புலப்பட்டது. கற்றோரைக் கற்றோர் காமுறுவர் என்பது மிக சரியாக எனக்கு தெரிந்தது. அந்த வகையிலே, மதிப்பிற்குரிய ராமசாமி ஐயா அவர்களுக்கு உரிய கௌரவம் கொடுத்து வியாக்கியானங்களை விளக்கிய அனைவருக்கும் என் சார்பிலும், எமது மன்றத்தின் சார்பிலும், கரம் கூப்பி, சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.

இப்பொழுது விடயத்துக்கு வருவோம் குலோத்துங்க சோழன் அரங்கத்தில் திருக் குறளுக்கு விளக்கவுரை எழுதுவதற்காக பல புலவர்கள் சமூகமளித்திருந்தனர், அவர்கள் எல்லோரும் விளக்கவுரை எழுதி இருந்தார்கள், ஆனாலும், பரிமேலழகர் எழுதிய விளக்க உரைதான் சிறந்ததாக உணரப்பட்டு அவையிலே ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதற்காக ஏனைய புலவர்கள் எழுதியவை எல்லாம் தவறானது என்பது அர்த்தமல்ல, அது போலவே இதிலே விமர்சனங்களைப் பதிவு செய்தவர்களில், தம்பி சுப்பிரமணியம் ரவி அவர்கள் தெரிவித்த கருத்துகள் சரியானவையாக ஏற்றுக் கொள்ளப்பட்டன. அவை சரியானவை என்பதை நான் உறுதிப்படுத்திக் கொண்டேன், ஏனென்றால் அந்தப் போட்டியை பார்ப்பதற்கு அன்றைய நாளில் என்னுடைய வாகனத்தில் 75-க்கும் மேற்பட்டவர்களோடு நானும், சென்றிருந்தேன். ரவி அவர்கள் அந்தப் போட்டியில் விளையாடி இருந்ததை நான் நன்றாக அறிவேன் ஆகவே, அவருடைய கருத்துக்கு மதிப்பளித்து அவர் கூறிய வீரர்கள் இந்த போட்டியில் விளையாடி இருந்தார்கள் என்பதனை நாம் அனைவரும் ஒப்புக் கொள்ள வேண்டியவர்களாக இருக்கின்றோம்.

பாடசாலையின் மேலுள்ள ஆர்வம் காரணமாக பலரும் பல விதமான விளக்கங்களை தந்திருக்கிறார்கள். தம்பி ரவி அவர்கள் எழுத்து மூலம் தந்த வீரர்கள் பின்வருமாறு:

1* ஊரெழு சிவப்பன்,
2* ஊரெழு சுகுமார் இராசலிங்கம்,
3* வயாவிளான் தயானந்தன்,
4* வயாவிளான் வடமூலை இராஜசிங்கம்,
5* ஒட்டகப்புலம் ஸ்டீவன்,
6* வயாவிளான் கேதீஸ்வரன்,
7* வயாவிளான் அவனிதரன்,
8* கட்டுவன் தயாளன்,
9* வயாவிளான் கண்ணதாசன்,
10*குப்பிளான் கணேச தாசன், கோல் காப்பாளர் இப்படியாக அந்த அணியில் விளையாடிய வீரர்களை வரிசையாக ஒழுங்குபடுத்தி தந்தமைக்காக அவருக்கு நமது மன்றத்தின் சார்பில் நன்றிகள்.

அவர் எங்களுடைய மன்றத்தின் விளையாட்டு வீரரும் கூட, அடுத்த விடயத்துக்கு வருவோம்.

விமர்சனங்கள் நிறைவாக வருவது விரும்பத்தக்கது, அதுவே நாங்கள் சரியானவற்றை தேர்ந்தெடுப்பதற்கு எங்களுக்கு மிகவும் அனுகூலமாகவும், உதவியாகவும் இருக்கும்.

ஆகவே பரந்து வாழுகின்ற புலம்பெயர் உறவுகளே!

நீங்கள் அனைவரும் இவற்றினை வாசிக்க வேண்டும், இவற்றிலுள்ள பிழை, சரிகளை, விவாதிக்க வேண்டும். சரியானவற்றை இனம் கண்டு எங்களுக்கு அறிவிக்க வேண்டும். என்று உங்களை தாழ்மையுடன் வேண்டிக் கொள்கிறேன்.

வரலாறு என்பது உண்மை தகவல்களை கொண்டிருப்பதுதான், அத்துடன் சில வர்ணனைகளும், ஆசிரியரின் கற்பனைகளும், வரலாற்றிற்கு உரம் ஊட்டுவதாகவும், வாசிப்பவர்களின் மனங்களில் உணர்வதற்கும், எழுதப்படுவது, ஆனபடியால், மறைக்கப்பட்ட வரலாறு இவற்றிலே ஒன்றும் இல்லை.

எங்களுடைய மன்றம் 60 ஆண்டுகளை கடந்தும் இப்பொழுதும் இயங்கிக் கொண்டிருப்பதற்கு காரணம் நமது 4 கிராம சேவையாளர் பிரிவுகளைக் கொண்டிருக்கின்ற வயாவிளான் என்கின்ற ஊரிலே, வயாவிளான் சமூகம் என்கின்ற ஒரு அமைப்பை இந்த மின் மீன் மன்றம் தான் ஏற்படுத்தியிருந்தது தான்.

ஆகவே 1953 ஆம் ஆண்டு காலத்தில், இதை ஆரம்பித்தவர்களான எமது முன்னோர்களின் எண்ணங்கள், சிந்தனைகள், இவைகளுக்கு உதவுவதாக வருங் காலத்தில் எங்களுடைய மன்றம் திகழ வேண்டும், திகழும் என்பது எமது மன்றத்தின் உறுதியான கருத்து. ஆகவே, வருகின்ற காலத்திலே நமது மன்ற வரலாற்றை கூரிய சிந்தனையோடு, மிகவும் தெளிவாக உங்கள் மனங்களில் வந்து பதியுமாறு பதிவுகளை மேற்கொள்ள ஆவலாக இருக்கின்றேன்.

13ஆம் எண் பொருத்தமற்றதாக இருந்தாலும், நாங்கள் இந்த 13ஆம் எண்ணிலே பொருத்தம் அற்றவர்களாக இல்லாமல், பொருத்தம் உடையவர்களாக இருப்போம் என்று கூறிக் கொண்டு மீண்டும் எங்களுடைய பாடசாலை சமூகம் எல்லோரும் இந்த ஆக்கங்களை படிக்கவேண்டும். பாடசாலையின் பவள விழா ஆண்டு வருகின்ற ஜனவரி நடுப்பகுதியில் வர இருக்கின்றது. பவளவிழா வாரமாக ஒரு வாரத்தைப் பிரகடனப்படுத்தி இருக்கின்றார்கள்.

இந்த பவள விழாவில் எமது மன்றம் பாடசாலைக்கு எவ்வாறான ஆதரவுகளை வழங்குவது, எப்படி பாடசாலையொன்றின் பயணிப்பது என்பது பற்றிய கருத்துக்களைத் தயவு கூர்ந்து தொடர்பு கொண்டு அறிவியுங்கள்.

தங்களின் வழியிலேயே, எங்களுடைய மன்றத்தின் நிர்வாகம் சரியான வழியை தேர்ந்தெடுத்து செயற்படும் என்பதனை உறுதியாக கூறி விடைபெறுகின்றேன்.

இவற்றினை எழுதுகின்ற ஆசிரியரின் இலக்கம் 0765517346
Share:

Popular Posts

Recent Posts

Contact Form

Name

Email *

Message *

Contact Form

Name

Email *

Message *