வணக்கம் அங்கம் நான் எழுதிய பன்னிரண்டாவது அங்கத்திலே எமது பாடசாலையையும், பாடசாலை சம்பந்தமான விளையாட்டு அணியையும், விளையாட்டு வீரர்களையும், பயிற்சியாளர்களையும், இன்னும் பல, பல தரப்பட்டவர்களையும் பற்றி எழுதியிருந்தேன்.
சம்பவம் நடைபெற்று நீண்ட காலமாக இருந்த படியாலும், யுத்தத்திலே நாங்கள் புலம் பெயர்ந்து உளரீதியாக பல பாதிப்புகளை அடைந்திருந்ததாலும், சில நினைவுகளைத் தவறாக பதிவிட்டுள்ளேன். அதற்காக நான் மிகவும் மனம் வருந்துகிறேன்.
அங்கம் 13 என்பது எண் சோதிடத்தில் பதின்மூன்றாம் இலக்கம் மானிடர்களுக்கு பொருத்தமற்ற ஒரு இலக்கமாக கண்டறியப்பட்டுள்ளது. பயணிகள் தங்கும் ஹோட்டல்களிலும், ஆஸ்பத்திரிகளில் இன்னும் ஏனைய இடங்களிலும் பதின்மூன்றாம் இலக்கத்தை தவிர்த்தே வருகின்றார்கள். ஆனால், என்னுடைய அங்கத்திலே பதின்மூன்றாம் இலக்கம் மிகவும் ஒரு உன்னதமான நிகழ்வினை விளக்குவதாக அமைந்துள்ளது.
பன்னிரண்டாம் இலக்கத்தில் எழுதப்பட்ட விடயங்களில் பல விளக்கங்களையும், பல வாதப் பிரதி வாதங்களையும், கடும் விமர்சனங்களையும், வரலாற்றின் தவறுகளையும், சரியான வரையறைகளையும், நிரூபிக்க உலகில் பரந்து வாழுகின்ற எங்களுடைய இனம் எடுத்துக் கொண்ட முயற்சிக்கு முதற்கண் எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வளவு உணர்ச்சியோடு எந்த ஒரு விவாதங்களையும் நான் எதிர் பார்க்கவில்லை, உணர்ச்சியில் விளையாடும் கவி சிங்கங்களாக அன்றைய காலத்தில் மத்திய மகா வித்தியாலய மாணவர்களும் சரி, விளக்கங்களை, விமர்சனங்களை, தங்களுடைய அறிவுக்கு ஏற்ற வகையிலே விளக்கி இருந்தார்கள்.
எனக்கு ஒரே ஒரு உண்மை புலப்பட்டது. கற்றோரைக் கற்றோர் காமுறுவர் என்பது மிக சரியாக எனக்கு தெரிந்தது. அந்த வகையிலே, மதிப்பிற்குரிய ராமசாமி ஐயா அவர்களுக்கு உரிய கௌரவம் கொடுத்து வியாக்கியானங்களை விளக்கிய அனைவருக்கும் என் சார்பிலும், எமது மன்றத்தின் சார்பிலும், கரம் கூப்பி, சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.
இப்பொழுது விடயத்துக்கு வருவோம் குலோத்துங்க சோழன் அரங்கத்தில் திருக் குறளுக்கு விளக்கவுரை எழுதுவதற்காக பல புலவர்கள் சமூகமளித்திருந்தனர், அவர்கள் எல்லோரும் விளக்கவுரை எழுதி இருந்தார்கள், ஆனாலும், பரிமேலழகர் எழுதிய விளக்க உரைதான் சிறந்ததாக உணரப்பட்டு அவையிலே ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதற்காக ஏனைய புலவர்கள் எழுதியவை எல்லாம் தவறானது என்பது அர்த்தமல்ல, அது போலவே இதிலே விமர்சனங்களைப் பதிவு செய்தவர்களில், தம்பி சுப்பிரமணியம் ரவி அவர்கள் தெரிவித்த கருத்துகள் சரியானவையாக ஏற்றுக் கொள்ளப்பட்டன. அவை சரியானவை என்பதை நான் உறுதிப்படுத்திக் கொண்டேன், ஏனென்றால் அந்தப் போட்டியை பார்ப்பதற்கு அன்றைய நாளில் என்னுடைய வாகனத்தில் 75-க்கும் மேற்பட்டவர்களோடு நானும், சென்றிருந்தேன். ரவி அவர்கள் அந்தப் போட்டியில் விளையாடி இருந்ததை நான் நன்றாக அறிவேன் ஆகவே, அவருடைய கருத்துக்கு மதிப்பளித்து அவர் கூறிய வீரர்கள் இந்த போட்டியில் விளையாடி இருந்தார்கள் என்பதனை நாம் அனைவரும் ஒப்புக் கொள்ள வேண்டியவர்களாக இருக்கின்றோம்.
பாடசாலையின் மேலுள்ள ஆர்வம் காரணமாக பலரும் பல விதமான விளக்கங்களை தந்திருக்கிறார்கள். தம்பி ரவி அவர்கள் எழுத்து மூலம் தந்த வீரர்கள் பின்வருமாறு:
1* ஊரெழு சிவப்பன்,
2* ஊரெழு சுகுமார் இராசலிங்கம்,
3* வயாவிளான் தயானந்தன்,
4* வயாவிளான் வடமூலை இராஜசிங்கம்,
5* ஒட்டகப்புலம் ஸ்டீவன்,
6* வயாவிளான் கேதீஸ்வரன்,
7* வயாவிளான் அவனிதரன்,
8* கட்டுவன் தயாளன்,
9* வயாவிளான் கண்ணதாசன்,
10*குப்பிளான் கணேச தாசன், கோல் காப்பாளர் இப்படியாக அந்த அணியில் விளையாடிய வீரர்களை வரிசையாக ஒழுங்குபடுத்தி தந்தமைக்காக அவருக்கு நமது மன்றத்தின் சார்பில் நன்றிகள்.
அவர் எங்களுடைய மன்றத்தின் விளையாட்டு வீரரும் கூட, அடுத்த விடயத்துக்கு வருவோம்.
விமர்சனங்கள் நிறைவாக வருவது விரும்பத்தக்கது, அதுவே நாங்கள் சரியானவற்றை தேர்ந்தெடுப்பதற்கு எங்களுக்கு மிகவும் அனுகூலமாகவும், உதவியாகவும் இருக்கும்.
ஆகவே பரந்து வாழுகின்ற புலம்பெயர் உறவுகளே!
நீங்கள் அனைவரும் இவற்றினை வாசிக்க வேண்டும், இவற்றிலுள்ள பிழை, சரிகளை, விவாதிக்க வேண்டும். சரியானவற்றை இனம் கண்டு எங்களுக்கு அறிவிக்க வேண்டும். என்று உங்களை தாழ்மையுடன் வேண்டிக் கொள்கிறேன்.
வரலாறு என்பது உண்மை தகவல்களை கொண்டிருப்பதுதான், அத்துடன் சில வர்ணனைகளும், ஆசிரியரின் கற்பனைகளும், வரலாற்றிற்கு உரம் ஊட்டுவதாகவும், வாசிப்பவர்களின் மனங்களில் உணர்வதற்கும், எழுதப்படுவது, ஆனபடியால், மறைக்கப்பட்ட வரலாறு இவற்றிலே ஒன்றும் இல்லை.
எங்களுடைய மன்றம் 60 ஆண்டுகளை கடந்தும் இப்பொழுதும் இயங்கிக் கொண்டிருப்பதற்கு காரணம் நமது 4 கிராம சேவையாளர் பிரிவுகளைக் கொண்டிருக்கின்ற வயாவிளான் என்கின்ற ஊரிலே, வயாவிளான் சமூகம் என்கின்ற ஒரு அமைப்பை இந்த மின் மீன் மன்றம் தான் ஏற்படுத்தியிருந்தது தான்.
ஆகவே 1953 ஆம் ஆண்டு காலத்தில், இதை ஆரம்பித்தவர்களான எமது முன்னோர்களின் எண்ணங்கள், சிந்தனைகள், இவைகளுக்கு உதவுவதாக வருங் காலத்தில் எங்களுடைய மன்றம் திகழ வேண்டும், திகழும் என்பது எமது மன்றத்தின் உறுதியான கருத்து. ஆகவே, வருகின்ற காலத்திலே நமது மன்ற வரலாற்றை கூரிய சிந்தனையோடு, மிகவும் தெளிவாக உங்கள் மனங்களில் வந்து பதியுமாறு பதிவுகளை மேற்கொள்ள ஆவலாக இருக்கின்றேன்.
13ஆம் எண் பொருத்தமற்றதாக இருந்தாலும், நாங்கள் இந்த 13ஆம் எண்ணிலே பொருத்தம் அற்றவர்களாக இல்லாமல், பொருத்தம் உடையவர்களாக இருப்போம் என்று கூறிக் கொண்டு மீண்டும் எங்களுடைய பாடசாலை சமூகம் எல்லோரும் இந்த ஆக்கங்களை படிக்கவேண்டும். பாடசாலையின் பவள விழா ஆண்டு வருகின்ற ஜனவரி நடுப்பகுதியில் வர இருக்கின்றது. பவளவிழா வாரமாக ஒரு வாரத்தைப் பிரகடனப்படுத்தி இருக்கின்றார்கள்.
இந்த பவள விழாவில் எமது மன்றம் பாடசாலைக்கு எவ்வாறான ஆதரவுகளை வழங்குவது, எப்படி பாடசாலையொன்றின் பயணிப்பது என்பது பற்றிய கருத்துக்களைத் தயவு கூர்ந்து தொடர்பு கொண்டு அறிவியுங்கள்.
தங்களின் வழியிலேயே, எங்களுடைய மன்றத்தின் நிர்வாகம் சரியான வழியை தேர்ந்தெடுத்து செயற்படும் என்பதனை உறுதியாக கூறி விடைபெறுகின்றேன்.
இவற்றினை எழுதுகின்ற ஆசிரியரின் இலக்கம் 0765517346
No comments:
Post a Comment