அன்புறவுகளுக்கு வணக்கம்.
வயவையின் தளத்தில் நின்று எம் மக்களுடன் பின்னிப் பிணைந்து உறவாடி அவர்களின் வாழ் வாதாரத்தின் மேம்பாட்டுக்காக கடந்த ஐந்தாண்டுகளாக தோளோடு தோள் நின்று பயணிக்கின்ற சட்டப்படி பதிவு பெற்ற மீள் எழுச்சிக்கான உதவுங் கரங்களின் செயற்பாட்டு ஆழம் மற்றும் நிர்வாகக் கட்டமைப்புப் பற்றி பகிர்ந்து கொள்வதில் ஒன்றியம் மகிழ்கிறது.
அண்மையில் உதவுங் கரங்கள் அமைப்பினால் வெளியிடப்பட்டிருந்த இறுதியாண்டுக்குரிய (2019) மிக நேர்த்தியாக ஒழுங்கமைக்கப்பட்ட கணக் கறிக்கையினை தாங்கள் எல்லேரும் உற்று நோக்கியிருப்பீர்கள். இதன்
அடிப்படையில் மொத்தக் கொடுப்பனவு ஏறக்குறைய பதினைந்து இலட்சத்து இருபத்து ஓராயிரத்து தொள்ளாயிரம் ரூபாக்களாகும்.(1521974.08) இச் செலவு போக, கை இருப்பாக உள்ள மீதித் தொகை ஏறக்குறைய இருபத்து நான்கு இலட்சத்து மூவாயிரத்து நூறு ரூபாக்களாகும். (2403137.74) அத்துடன் தளபாடச் சொத்தின் பெறுமதி ஏறக் குறைய பதினேழாயிரத்து ஐந்நூறு ரூபாக்களாகும்.
(17595) உதவுங் கரங்கள் அமைப்பின் இத்தகை உன்னதமான செயற்பாடும், உறுதியான நிதி நிலைமையையும், சாத்தியமாக்கியவர்கள் யார்?
சிந்திப்போம் நிதானிப்போம்.
உதவும் கரங்கள் அமைப்புக்கு நிதிப் பங்களிப்பு செய்துவரும் கனடா, அவுஸ்திரேலியா, சுவிஸ், யொ்மன், பிரான்ஸ், பிரித்தானியா ஆகிய நாடுகளிலுள்ள ஒன்றியங்களின், சங்கங்களின் வீரியமான ஆற்றுகைகளும், மற்றும் நேரடியாக நிதிப் பங்களிப்பு செய்த ஆவலர்களும், அத்துடன் இறுக்கமான நிர்வாகக் கட்டமைப்புடன் உறுதியாகப் பணியாற்றும் உதவுங் கரங்கள் அமைப்பின் செயலர்களுமே இவ் உயர் நிலையை சாத்தியமாக்கியவர்கள் ஆவர்.
ஆனாலும் இவர்கள் கோழியைப் போல் இல்லாமல், ஆமையைப் போல் ஆயிரம் முட்டையிட்டாலும் ஆற்பாட்டம் ஏதுமின்றி தம் இலக்கை நோக்கி தடம்பதிக்கின்ற இவர்கள் என்றும் போற்றிப் புகழப்பட வேண்டியவர்கள். இச் சந்தர்ப்பத்தில் எங்கள் உதவுங் கரங்கள் அமைப்பின் நிர்வாக கட்டமைப்பின் முறைமை பற்றி மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டியது மிக அவசியமாக உள்ளது.
ஏனெனில் இந்த வெற்றிக்கு உதவும் கரங்கள் அமைப்பு பொதுவான சங்கங்கள், ஒன்றியங்களுக்குரிய சட்ட திட்டங்களின் கீழ் பதியப்படாது மாறாக ஒரு நம்பிக்கையாளர் சபைக்குரிய சட்ட திட்டங்களால் வரையறுக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டமையே அடிப்படைக் காரணமென ஒன்றியம் அழுத்திக் கூறுகின்றது.
இன்று சமூக செயற்பாட்டுப் பொது வெளியில் செயற்பட்ட அமைப்புகள் பலவற்றில் பணமோசடிகள் நிர்வாகச் சீர்கேடுகள் தலை தூக்கி தொடர்ந்து செயற்பட முடியாமல் அவை இருந்த இடம் தெரியாமல் அழிந்து போயுள்ளன.
இம் மோசடிகளுக்கு மக்கள் விளக்கம் கேட்டபோது அல்லது, கணக்கு கேட்டபோது, நடைமுறையிலிருந்த நிர்வாகக் குழு முன்பிருந்த நிர்வாகக் குழுவினர் மீதும் முன்பிருந்த நிர்வாகக் குழுவினர் தொடர்ந்து வந்த நிர்வாகக் குழுவினர் மீதும் பரஸ்பரம் குற்றங்களை சுமத்தி ஒவ்வொரு வரும் பொறுப்பிலிருந்து தப்பித்துக் கொண்டனர்.
இவற்றினை சீர்தூக்கி ஒப்பு நோக்கியதன் பயனாக நாம் அனுப்பும் நிதிக்கும் மற்றும் செயற்பாடுகள் அனைத்திற்கும் காலம் எவ்வளவு கடந்தாலும் குறித்தவர்களே பொறுப்பு என்கின்ற சட்டத்தால் வரையவு செய்யப்பட்ட ஒரு அமைப்பு எங்களுக்கு தேவையாக இருந்தது.
இதனை வயவையின் ஒருமித்த எண்ணம் கொண்ட தன்னலமற்ற சமூக அக்கறை கொண்ட நண்பர்களுடனும், கல்விமான்களுடனும், பெரியோர்களுடனும், பகிர்ந்து கொண்டோம். இதன் போது எங்கள் எண்ணங்களை நிறைவு செய்யக்கூடிய மேலும் பல சட்ட இறுக்கங்களைக் கொண்ட நம்பிக்கையாளர் சபை என்கிற அமைப்பைத் தெரிவு செய்தோம்.
இச்சபையின் சட்ட வரைபுக்கு உட்பட்டு பதியப்பட்ட ஒர் அமைப்பாக வயவையின் மீள் எழுச்சிக்கான உதவுங் கரங்கள் அமைப்பு எழுந்து நின்றது.
உறவுகளே!
மக்களால் தெரிவு செய்யப்படுகிற மாறும் நிர்வாகக் குழு முறை ஒன்று இருப்பின் நடப்பது என்ன? புதிய நிர்வாகத் தெரிவுகளின் போது ஒன்றியங்களுடன் ஒத்துப் போகாதவர்கள் உள் நுழைந்து விட்டால் எல்லாமே சீரழிந்துவிடும். இதற்கு யாரைப் பொறுப்பாக்குவோம். மாறி, மாறி, வரும் நிர்வாகக் குழுக்கள் ஒரு குழுவின் மீது, இன்னொரு குழு குற்றம் சாட்டி தப்பித்து விடுவார்கள். இது திட்ட மிட்டும் நடைபெறலாம். ஆனால், நம்பிக்கையாளர் சபையில் ஏழுபேர் நிர்வாக உறுப்பினராக இருப்பர். இவர்களின் பதவிக்காலம் தொடர்ச்சியானது. இவர்களில் மாற்றம் செய்யும் அதிகாரம் இந்த ஏழுபேருக்கு மட்டுமே உண்டு. இவர்களே என்றும் எமக்கு பொறுப்பு கூறுபவர்கள்.
நன்றி
நிர்வாகம்.
No comments:
Post a Comment